
புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி
தாளாளர்: அருட் சகோதரி S. அமல மேரி
தலைமை ஆசிரியர் : அருட் சகோதரி மகதலேனா மேரி
மொத்த மாணவிகளின் எண்ணிக்கை : 1986
எழில் பொங்கும் நகரான கிருஷ்ணகிரியின் மையத்திலே மனுகுலம் போற்று மாதவளை ஈன்ற தாயாகிய, அன்னமாளின் பெயரை தாங்கிய எம் பள்ளி அனைவரும் வியக்கும் வண்ணம் வானளாவி உயர்ந்த கொண்டிருக்கிறது.
அன்பும் சேவையும்
என்ற விருது வாக்கை மனதில் ஏற்றவர்களாய்
வெண்புறாக்களாய்
ஆண்டவனின் சீதனமாய்,
நடமாடும் தேவதைகளாய்,
நாடு கடந்து வந்த நதிகளாய்,
இந்திய மண்ணிலே தடம் பதித்து,
ஏழை எளிய மக்களின் வாழ்வு உயர,
பெண் பிள்ளைகளின் வாழ்வு மலர
- தங்களையே அர்ப்பணித்து சேவை புரியும் எம் FSM அருட் சகோதரிகளால்
--1937 -ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாய் பிறந்து.
--1954-ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாய் தவழ்ந்து.
--1978-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாய் உயர்ந்து.
--1996 - ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாய் மேன்மையடைந்து உங்கள் முன் சிகரமாய் நிற்கின்றது எம் பள்ளி.
மனித நேயம் மிக்க மாணவிகளை உருவாக்கும் நோக்கில் குறைவான மாணவ மாணவிகளுடன் தொடங்கப்பட்ட எம் பள்ளி இன்று 1986 மாணவிகளுடனும், சிந்தாமல் சிதறாமல் சிலை வடிவில் சிற்பிகளாய் மிளிரும் 57 ஆசிரிய பெருமக்களுடனும், உழைப்பை உயிராய் கருதி ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் 8 அலுவலகப் பணியாளர்களுடனும், பள்ளி மாணவிகளுக்கு மதிய உணவு அளிக்க பொறுப்பாளர், உதவியாளர் என நான்கு நபர்களும் இணைந்து வெற்றி நடை போடுகின்றது. "அரசு தேர்வு எழுத துவங்கிய நாள் முதல் இந்நாள் வரை ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுத்தேர்வில் 100%
தேர்ச்சியையும், பல பாடங்களில் 100 / 100 மதிப்பெண்களையும், ஒவ்வொரு ஆண்டு NMMS தேர்வில் அதிக மாணவிகளின் தேர்ச்சி விகிதமும் தற்போதைய தலைமையாசிரியை Sr. மேக்தலினா அவர்களின் அரிய முயற்சியால் இவ்வாண்டு 40 மாணவர்கள் NMMS தேர்வில் வெற்றி பெற்றதற்காக மாதா மாதம் ரூ 1500 என நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பெற்றுள்ளது. எம் பள்ளிக்கு மேலும் மெருகூட்டுகிறது.
கடந்த 35 ஆண்டுகளாக, நன்னடத்தை, உடல் நலம் கைவினைப் பயிற்சி,பிறருக்கு தொண்டு புரிதல், என்ற நான்கு தூண்களின் மேல் கட்டி எழுப்பப்பட்ட சாரண இயக்கம் எம் பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 120 சாரணியர்களை மாநில அளவில் உயரிய விருதான ராஜ்யபிரஷ்கார் (ஆளுநர் விருது) பெற்று சிறந்த குடிமக்களாக, இச் சமுதாயத்தில் உலா வருகின்றனர். மேலும் சேவை மனப்பான்மை, தொண்டுள்ளம், கொண்டு வாழ, செஞ்சிலுவை இயக்கமும், இயற்கையைப் பேணி காக்க. பசுமை படையும் எம் பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, ஆகிய நாட்களில் மாவட்ட அளவில் கலை நிகழ்ச்சிகளை தந்து, மாவட்ட ஆட்சியரிடமிருந்து, நினைவு பரிசினை பெற்று, பெருமைக்குரிய ஒரு பள்ளியாக திகழ்கிறது எம் பள்ளி.
#ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையால்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்
என்ற திருக்குறள் வழி நின்று மாணவிகளின் தனிப்பட்ட திறன்களை கண்டறிந்து அதனை வெளிக்கொணர்ந்து பன்முகத்திறன் கொண்ட மாணவிகளாய் உருவாக்கி கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டு, கலை, அறிவியல், இலக்கியம் போன்ற பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்குகின்றனர். அதனால் பயன் பெற்ற மாணவிகள் சிகரம் தொட்டு ஆலமரத்தின் கிளைகளாய் உலகமெங்கும் பரவி பல நாடுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். 'தூரம் அதிகம் இல்லை - நீ நினைத்தால் கடலை நீந்தி வந்து விடலாம். பார்த்த உயரம் பெரிதல்ல - நீ நினைத்தால் மலையை கூட ஏறி சாதித்திடலாம். 'என்று ஊக்கம் கொடுத்து, சிறந்த மாணவிகளை உருவாக்கி, ஒழுக்கத்தை உயிரென கருத செய்து, தெளிந்த சிந்தனை உள்ள பெண்மணிகளாய், புது உலகம் படைக்கும் ஊக்கம் பெற்ற சிங்கப்பெண்களாய்.
இவ்வாறு எம் பள்ளியின் பெருமையை பாராட்டாதவர்கள் எவரும் இல்லை கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே தகுதியான தரமான கல்வியை அளிக்கும் பள்ளியாகவும் புனித பாத்திமா அன்னையின் பார்வையில் நாள்தோறும் நடைபயின்று மேலும் பல சாதனைகளை புரியும் பள்ளியாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.