
நெறிமுறைகள்
#கிருஷ்ணகிரி பங்குத்தளம்
அருள்பணியாளர்களின் ஒத்துழைப்புடன் கண்காணிக்கப்படுவதற்காக ஆயரிடம் ஒப்படைக்கப்பட்ட இறைச் சமூகத்தின் ஒரு பகுதியே மறைமாவட்டம் (திருச்சபையில் ஆயர்களின் அருள்பணி:11). ஆயர் எப்பொழுதும் தமது முழு மந்தையுடன் இருக்க இயலாது எனவே நம்பிக்கையாளர்களைக் கொண்ட குழுக்களை அவர் உருவாக்குதல் இன்றியமையாதது இக்குழுக்கள் அந்தந்த இடத்தில் ஆயருக்கு பதிலாயிருக்கும் அருள்பணியாளர்களின் கீழ் அமைக்கப்பட்டு சிறந்து விளங்குகின்றன. ஏனெனில் உலகமெங்கும் நிறுவப்பட்டிருக்கும் காணக்கூடிய திருஅவையை இவை ஒருவாறு குறித்துக்காட்டுகின்றன (தி.வா.42). எனவே பங்குத் தளம் என்பது ஒரு சிறிய திருஅவையாகும். திருஅவை கடவுளுடைய குடும்பம் என்று அழைக்கப்படும். (எபேசி 2:20). ஆகவே ஒவ்வொரு பங்குத் தளமும் கடவுளுடைய சிறுகுடும்பம் ஆகும். காணக்கூடிய தந்தை பங்குத் தந்தை ஆவார். பங்கிலுள்ள அனைவரும் இக்குடும்பத்தின் உறுப்பினர்கள். அனைவரும் கிறிஸ்தவ மேன்மையை உணர்ந்து, நம்பிக்கை வாழ்வில் ஆழமும் அகலமும் கொண்டு விளங்க வேண்டும்.
#திருவழிபாடு நெறிமுறைகள்
- அனைத்துத் திருவழிபாட்டு நிகழ்வுகளிலும் புதிய மொழிப்பெயர்ப்புத் திருவிவிலியமும் திருமறைச்சுவடியில் காணப்படும் செபங்களும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- பங்கில் பீடப்பூக்கள் (இருபால் திருத்தூயகப் பணியாளர்கள் வாராந்திர திருப்பணிக்கான பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் ( ஒவ்வொரு மாதம் 1 ஆம் மற்றும் 3ஆம் ஞாயிறு).
- ஞாயிறு மற்றும் முக்கிய திருநிகழ்வுகளுக்கு முன் திருவழிபாட்டு இசைக்குழு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பாடல்கள் அனைத்தும் பொருள் உணர்ந்து பாடக்கூடிய வகையில் இயலும் இசையும் அமைய வேண்டும்.
- புதிதாகத் தொடங்கப்படும் எல்லாப் பக்தி முயற்சிகளும், அறிமுகப்படுத்தப்படும் புதியச் செபங்களும் விரிவாக்கப் பணிகளும் ஆயரின் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்ற பிறகே செயல்படுத்தப்பட வேண்டும்
- ஆலயத்திலும், கிளைச்சிற்றாலயங்களிலும் திருஅவை வழிபாட்டுக்கு நிர்ணயித்துள்ள வண்ணங்களில் மட்டுமே திருவுடைகளும் ஏனைய திருப்பொருள்களும் திருப்புத்தங்களும் போதுமான அளவு இருத்தலையும் அவை நல்ல நிலையில் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
- பிளாஸ்டிக் பொருள்களும் கிண்ணங்களும், செயற்கைப் பூக்களும் திருத்தூயகப் பயன்பாட்டில் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
#திருப்பலி நெறிமுறைகள்
- திருப்பலியின் மேன்மை, ஆழ்பொருள் உணர்ந்து அனைவரும் இணைந்து பங்கேற்கும் வகையில் தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளல் வேண்டும்.
- வழக்கமான நவநாள் மற்றும் புனிதர்களை நோக்கிய செபங்கள் திருப்பலிக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும்.
- திருப்பலியில் அருள்பணியாளர் சிலுவை அடையாளம் வரையுமுன்பே திருப்பலிக் கருத்துகள் அறிவிக்கப்பட வேண்டும்.
- பீடத்திலிருந்து நற்செய்தி வாசிக்கப்படக் கூடாது.
- நம்பிக்கையாளர்களின் மன்றாட்டு வாசக மேடையிலிருந்து செபிக்கப்படும்.
- வாழ்த்து மற்றும் நன்றி நிகழ்வுகள் வழியனுப்பும் விடுப்புக்குப் பின்னரே இடம்பெற வேண்டும்.
- சிறப்புத் தருணங்களில் பொது நிகழ்வு மேடைகளில் திருப்பலி ஒப்புக்கொடுக்க மறைமாவட்ட ஆயர் மற்றும் மறைமாவட்ட திருவழிபாட்டுக் குழுவின் அனுமதி பெற வேண்டும்.
- அன்பியமாக ஒன்றுகூடிக் கொண்டாடும் அன்பியப் பாதுகாவலர் திருப்பலியை அல்லது தவக்காலத் திருப்பலியை தூய்மையான இடத்தில் ஒப்புக்கொடுத்துக் கொண்டாடலாம்.
- தலப்பங்கின் அருள்பணியாளரின் முன் அறிவிப்பின்றி அப்பங்கின் எல்லைக்குட்பட்ட எந்த இடத்திலும் இல்லத்திலும் வேறொரு அருள்பணியாளர் எத்தகைய திருப்பணிகளும் மேற்கொள்ளக்கூடாது.
#ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்போம்
ஞாயிறு வழிபாட்டில் பங்கேற்பது திருஅவையின் ஒழுங்கு முறையாகப் பார்க்காமல் அதன் ஆழமான பொருளைப் புரிந்து, பங்கெடுத்து, அதன் பயனை அடைய சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஞாயிறு வழிபாடு குடும்பங்களின் திருவழிபாடு. பங்கு என்ற சமூகத்தின் திருவழிபாடு. எனவே, குடும்பங்கள் பங்கெடுக்கின்றன என்ற பார்வையோடு பங்கு மக்களின் கூட்டு வழிபாடு என்ற பார்வை வேண்டும். சமூகம் என்ற பார்வை குடும்பத்திலிருந்து தொடங்கி திருஅவையில் நிறைவுபெறுகிறது. குடும்பம் ஒரு சமூகம். பங்கும் ஒரு சமூகம். திருஅவையும் ஒரு சமூகமே. பல குடும்பங்களின் ஒருங்கிணைப்பே பங்குத்தளம் என்பதால் அதுவும் சமூகமே.
எனவே, குடும்பங்கள்தான், ஞாயிறு வழிபாட்டின் பங்கேற்பு உறுப்புகள். ஆகையால், ஞாயிறு திருவழிபாடு, குடும்பங்களின் திருவழிபாடு குடும்பங்களை மையமாகக்கொண்ட திருவழிபாடாக அமைய வேண்டும் பங்கிலே நடைபெறும் திருவழிபாடாக அமைய வேண்டும். அந்தத் திருவழிபாடுகளில் அனைத்துக் குடும்பங்களும் உரிமையோடும் கடமை உணர்வோடும் பங்கேற்க வேண்டும். எனவே இறைவனோடும் திருஅவையோடும் பங்கு மக்கள் அனைவரோடும் உள்ள உறவைப் புதுப்பிப்போம். இறைவார்த்தை வழியாக குடும்ப வாழ்வைச் சீர்ப்படுத்துவோம் .நற்கருணை வழியாக நமது அர்ப்பணத்தைப் புதுப்பிப்போம். பங்கேற்க இயலாதவர்களை பற்றியும் அக்கறை கொள்வோம், வழிகாட்டுவோம்.
ஞாயிறு திருவழிபாட்டில் முழுமையாகப் பங்கேற்போம் (வருகைப்பாடல் முதல் இறுதிப் பாடல் வரை).
- இணைந்து செபித்து, பாடி பங்கேற்பாளர்களாக மாறுவோம்.
- வாய்ப்புகள் கொடுக்கப்படும்போது, வாசிக்கவும் செபிக்கவும் முன்வருவோம்.
- முழுமையாகப் பங்கேற்க, பொருத்தமான இருப்பிடங்களைத் தேர்வு செய்வோம்.
- பங்கு மக்கள் என்ற சமூக உணர்வோடு பங்கேற்போம். உறவுகளை விரிவுபடுத்துவோம்
- திருவிருந்தில் பங்கேற்பதை கட்டாயமாக கருதுவோம்