
இயேசுவின் திருஇருதய ஆலயம்
வி.மாதேப்பள்ளி
கிருஷ்ணகிரி மறைமாவட்டம் எலத்திகிரி பங்கில் உள்ள காத்தான்பள்ளம் என்ற சிறிய ஊரில் இருந்து இரண்டு குடும்பங்கள் முதன் முறையாக V.மாதேப்பள்ளிக்கு குடியேறினார்கள். காத்தான்பள்ளத்தில் ஏற்பட்ட வறட்சி, பஞ்சம் போன்றவற்றின் காரணமாக இவ்விரு குடும்பத்தினரும் இங்கு வந்ததாக கூறப்படுகிறது. இங்கு குடியேறிய பெரியநாயகம் மற்றும் செல்வப்பன் குடும்பத்தினர் ஒன்பதரை ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர்.
பின் நாட்களில் பெரியநாயகம் தன் நிலத்தை விற்றுவிட்டு கெலமங்கலம் என்ற ஊருக்கு குடியேறினார். இன்றும் செல்வப்பன் குடும்பத்தினர் மட்டும் இங்கே வாழ்ந்து வருகின்றனர்.
செல்வப்பனின் மகன்கள் அருள்தாஸ், ஜோதி பெலிக்ஸ் செல்வப்பனின் இரண்டாம் மனைவி, அகஸ்டினா மேரி ஆகியோர் இவ்விடத்திலேயே விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். செல்வப்பனும் 1985 ஆம் ஆண்டு இறந்து விட்டார்.
அருள்தாஸ், ஜோதி பெலிக்ஸ் ஆகியோர் திருமணம் செய்து தனித்தனியே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அகஸ்டினா மேரி இளைய மகளுடன் இங்கேயே வாழ்ந்து வருகின்றார். இங்கு ஆலயம் இல்லை எனவே இவ்விடத்தில், மாதந்தோறும் திருப்பலி நிறைவேற்ற குருக்கள் செல்லவில்லை. எனவே திரு.செல்வப்பன் இறந்தபோது எலத்தகிரி பங்குதந்தை அருட்பணி A.செபஸ்டின் அவர்கள் அடக்க சடங்கிற்கு வந்து திருப்பலி நிறைவேற்றியுள்ளார். வீட்டின் முற்றப்பகுதியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி பங்குத்தந்தை அருட்தந்தை சவரியப்பான் அவர்கள் மாதேப்பள்ளியில் மாதந்தோறும் திருப்பலி நிறைவேற்ற வருகை தந்தார்.
திருமதி, அகஸ்டினா மேரி தனது ஒரு ஏக்கர் நிலத்தில் 18 சென்ட் நிலத்தைஆலயம் கட்ட தானமாக பங்குத் தந்தையிடம் வழங்கினார். அந்த நிலத்தில் குடிசை அமைத்து 2006 முதல் 2008வரை திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இந்த நிலத்தின் ஓரத்தில் லூர்துமாதா கெபி கட்டப்பட்டது. ஆலயம் கட்டும் பணிக்காக இங்குள்ளவர்களே, கிறிஸ்துவ மக்களிடம் நன்கொடைகள் பெற்று அருள்தந்தை M.ஜெகராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆலயம் கட்டப்பட்டது.
இந்த ஆலயம் இயேசுவின் திரு.இருதயத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி அன்றைய பங்குத்தந்தை M.ஜெகராஜ் அவர்களால் மந்திரிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குத்தந்தை, திருப்பலி நிறைவேற்றி வந்தார். பின் 2009 முதல் மாதத்தின் 2 ஆம் மற்றும் 4 ஆம் ஞாயிறுகளில் காலை 11.00 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மேலும் அனைத்து பெருவிழா நாட்கள் மற்றும் குடும்பங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு, திருப்பலி நிறைவேற்றப்படுகின்றன.
பிறமத சகோதர, சகோதரிகளும் இவ்வாலயத்திற்கு வந்து இறையாசீர் பெற்றுசெல்கின்றனர்.