
புனித சூசையப்பர் ஆலயம் - பெரியேறிக்கொடி
இறைமக்களிடம் குறையா விசவாசம் குவிந்தே நிற்க, செபம் ஒன்றே செயலுக்கு அடித்தளம், செயல் ஒன்றே வெற்றிக்கு வழிதடம் என்றே முயன்று எழும்பி நிற்கின்றது புனித சூசையப்பர் ஆலயம், பெரிய ஏரிக்கோடி.
1960 ஆம் ஆண்டு எலத்தகிரி ரத்தினம் குடும்பம் பெரிய ஏரிக்கோடியில் குடியேறியது. அவர்களை தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு பெரியராஜ் குடும்பமும், அந்தோணிராஜ் குடும்பமும் குடியேறியது. 1965 மணியம் துரைசாமி குடும்பம். 1967 மணியம் ஞானப்பிரகாசர் குடும்பம், 1970 மணியம் மாணிக்கம் குடும்பம் போன்றோர். கம்மனூரில் இருந்து பெரிய ஏரிக்கோடியில் வந்து குடியேறினர். 1975 ல் சாமிகண்ணு குடும்பத்தினர் எலத்தகிரியில் இருந்து வந்து குடியேறினர்.
ஆரம்ப கால கட்டத்தில் 7 கிறிஸ்துவ குடும்பத்தினர் மட்டுமே பெரிய ஏரிக்கோடியில் வாழ்ந்து வந்தனர். முதலில் பெரிய ஏரிக்கோடியில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் மட்டுமே வைக்கப்பட்டு 1975ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி பங்குத்தந்தை, அருட்தந்தை ஐசக் அடிகளார் அவர்களால் சிறிய பந்தல் அமைக்கப்பட்டு அதில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதே போன்று வருடம் ஒருமுறை வனத்து அந்தோனியார் திருவிழா அன்று திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
சுமார் 32 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருப்பலி நிறைவேற்றப்பட்ட நிலையில் 1994 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி பங்கு தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை P.சேவியர் அவர்கள் பெரிய ஏரிக்கோடியில் உள்ள மக்களை சந்தித்து, ஓடு போட்ட ஆலயம் ஒன்றை கட்டிட ஏற்பாடு செய்தார்.
பிறகு கோவில் கட்ட நிலத்தை திரு. அந்தோணிசாமி அவர்கள், 50 சென்ட் தானமாக கொடுத்தார். மேலும் 73 சென்ட் நிலத்தை ஆலயத்துக்காக மறைமாவட்டம், விலைக்கு வாங்கியது. இவை அனைத்தும் ஆயர் ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களின் முயற்சியால், பங்கு தந்தையாக அருட்தந்தை P.சேவியர் அவர்கள் பணியாற்றிய போது வாங்கப்பட்டது.
சூசையப்பர் ஆலயம் கட்ட பரிந்துரைக்கப்பட்டு, ஓடு போடப்பட்ட ஆலயத்தில், வாரம் ஒருமுறை திருப்பலி, நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களின் ஆசியோடு பங்கு தந்தை ஜெகராஜ் அவர்களின் முயற்சியினாலும், மறைமாவட்டம் வழங்கிய பொருள் உதவியுடனும், இறைமக்கள் வழங்கிய நிதியுதவியுடனும், ஆலயம் கட்டப்பட்டு புனித சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு மேதகு ஆயர் ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்கள் புனிதப்படுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் புனித சூசையப்பர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.